- கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
‘புதியன விரும்பு’ என்பது பாரதி வாக்கு. அப்படியொரு புதுமை அரங்கேறும் வேளை இது. ஏறத்தாழ 75 ஆண்டுகள் கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பூட்டப்பட்டிருந்த பாரதியின் கையெழுத்துகள் இப்பொழுது முழுமையாக விடுதலை பெற்றுள்ளன. ஆய்வாளர்கள்கூட அணுக முடியாது பொத்திப் பொத்தி வைக்கப்பட்ட புதையல் கணினி யுகத்தின் நற்பலனாய்ப் பெருவாரியான மக்களிடம் போய்ச்சேரப் போகிறது.
இனி, பாரதி ஆய்வாளர்கள் தங்களின் அரிய ஆய்வை மூலத்துடன் ஒப்புநோக்கி பல உண்மைகளை வெளிக்கொணரலாம். கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேலான மூல ஆவணங்கள் ஒளிப்படிமம் செய்யப்பட்டுள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்த ஏடுகள் பெருந்திரட்டுக்குள் சேர்ந்துள்ளன. இது ஓர் அசாதாரண முயற்சி.
அரசின் இந்த நன்முயற்சி பாரதி இயல் வரலாற்றுக்குப் பொற்காலம். வரும் தலைமுறை இதை பொன் எழுத்துகளால் பொறிக்கும்.